பெருமளவான ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை ஆதரிப்பது ஏன்?


நண்பர் கோபிநாத் தமிழ்கோராவில் இந்த பதிலை எழுதியிருக்கிறார். இந்த பதிலின் ஒவ்வொரு எழுத்தையும் நான் அங்கீகரிப்பதால் இதை எனது மந்திரம் வலைப்பூவில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 ஈழத்தில் அரசியலே இருந்ததில்லை. நம்பமுடியவில்லையா? உண்மை அதுதான். தந்தை செல்வாவின் ( ஈழத்தின் காந்தி) காலத்தின் பின்பு தமிழர்கள் அரசியலை வெறுத்தார்கள். காரணம் இலங்கை அரசியலில்தமிழர்களின் உரிமைகள் எங்கும் இல்லை. அரசியல் மூலமாக எதையுமே பெறமுடியாது. கல்வியில் சிங்களப்பிள்ளைகள் எல்லாம் பல்களைக்கழகம் செல்ல தமிழ்ப்பிள்ளைகள் மிகப்பெரும் சவால்களை சந்திக்கவேண்டும். அப்படி அற்புதம் நிகழ்ந்தால் தான் செல்லமுடியும். உதாரணமாக 3s எடுத்த ஒருவர் சிங்கள தேசத்தில் பல்கழைக்களகம் சென்றால் இங்கே 2A B எடுக்கவேண்டும். இந்தக்கொள்கை வந்ததும் தமிழர்கள் கல்வியில் நம்பிக்கை இழந்து ஆயுதப்போராட்டத்தில் இணைந்தார்கள். ஆயுதப்போராட்டாம் வலுப்பெற்ற காலத்தில் ஈழத்தில் அரசியல் கட்சிகளோ தலைவர்களோ எல்லாம் இல்லை. அது சிங்கள தேசங்களில் நடக்கும். சிங்கள மக்கள் தமக்கான தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

ஈழத்தில் நிர்வாகத்தை புலிகள் நடத்தினார்கள். உண்மையில் அப்போது தெரியவில்லை. இப்போது சிந்தித்தால் அது ஒரு பொற்க்காலமே தான். இந்தியாவில் என்ன சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்ததோ அதே போல ஈழத்திலும் இருந்தது. விடுதலைப்புலிகள் வந்ததும் அதை அப்படியே ஒழித்தார்கள். பேச்சுக்காக சொல்லவில்லை. உண்மையில் நிகழ்த்தியும்காட்டினார்கள்.

முன்பு உடைகள் சுத்தம் செய்பவர் வீட்டில் வந்து உடைகளை எடுத்துச்செல்வார். விடுதலைப்புலிகள் கூறினார்கள் அவர்களுக்கு தேவை என்றால் அவர்கள் உங்களிடம் தருவார்கள். நீங்கள்போய் வேண்டத்தேவையில்லை என்று. அதன் பிறகு அவர்கள் வீடு தேடி வருவதில்லை. தங்கள் பிள்ளைகளை நன்றாக படிப்பித்தார்கள். உண்மையாக புலிகள் இல்லை என்றால் தாழ்த்தப்பட்வர்கள் கல்வியில் முன்னேற பெரும்பாடு பட்டிருப்பார்கள். இதை விடுதலைப்புலிகளை எதிர்ப்பவரும் ஏற்றுக்கொள்வர் அதேபோல முடி வெட்டுபவரும் வீடு சென்று வெட்ட தடை.

மிகைப்படுத்தி சொல்வதாய் நினைப்பீர்கள். புலிகள் ஓரளவு பலமாகி வந்த காலத்தில் அங்கு ஒரு பிச்சைக்காரர் இல்லை. அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கினார்கள். இனி அதை எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. தமிழர்களுக்கான அறம் சார்ந்த அரசை நிறுவினார்கள்.

சமாதானகாலம் வந்தது. அப்போதுதான் அரசியலிலும் நாம் பலமாக இருக்கின்றோம் என்பதை உலகிற்க்கு காட்டவேண்டும் என்று சிந்தித்தார்கள். பல குழுக்களாக பிரிந்திருந்த தலைவர்களை இணைத்து ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு’ எனும் கட்சியை மீள் உருவாக்கம் செய்தார்கள். இன்றுவரை தலைவர் உருவாக்கிய கட்சி என்றே மக்கள் கூட்டமைப்பிற்க்கு வாக்களிக்கின்றார்கள். ஆனால் அரசியல் தலைவர்கள் மக்களை மறந்தார்கள். முன்னாள் போராளிகளை மறந்தார்கள். அரசியல் கட்சியை மீள் உருவாக்கம் செய்து கூட்டமைப்பில்போட்டியிட்ட அனைவருமே வெற்றி பெற வைத்தார்கள். அதுவரையில் அரசியல் புரிதல் இல்லாமல்இருந்தவர்கள் வாக்கு எப்படி செலுத்தவேண்டும. எப்படி புள்ளடியிட்டால் அது செல்லாத வாக்காகும் என்பதை எல்லாம் வீதிநாடகங்கள் கருத்தரங்குகள் மூலம் சொல்லித்தந்தார்கள். மிகப்பெரும் வெற்றிபெற்று இலங்கையின் நான்காவது பெரும்கட்சியாகியது கூட்டமைப்பு ( 27 உறுப்பினர்கள் என்று நினைக்கின்றேன்)

பிற்க்காலத்தில் வல்லாதிக்கத்தின் சூழ்ச்சி மற்றும் துரோகங்கள் உலகமே படை திரட்டி புலிகளை மூர்க்கமாக தாக்கி நெருக்கியது. உலகம் எல்லாம் இருந்த தமிழர்கள் போரை நிறுத்த பெரும்பாடுபட்டார்கள். பொது இடங்களில் கூடினார்கள். போராடினார்கள். அப்போது துரதிஸ்ரமாக அன்ரன் பாலசிங்கமும் இல்லை. அவர்இயற்க்கை எய்தி இருந்தார். நாம் உலகம் எல்லாம் போராடி என்ன பயன். அரசியல் ரீதியாக எம் கருத்தை கூறயாருமே இல்லாத ஒரு அனாதைகளாக உலகின் பழம்குடியாம் தமிழ்க்குடி வீதி வீதியாய் ஒப்பாரி வைத்து திரிந்தது. பேச யாருமே இல்லை என்று அங்கலாய்த்தது கொண்டிருந்தது. முத்துக்குமார் உட்பட்ட மாவீரர்கள்தம்மை தீயிட்டு கொன்றார்கள். தமிழ் இனம் என்ன செய்யும். உலகே நாம் பேரரசாக எழும் அற்ப்புதம் நிகழவேகூடாது என்று ஆணவமாக எதிர்க்கிறதே.

அப்போது ஆழும்கட்சியில் ஒரு அங்கமாக இருந்த தி.மு.க யுத்தம் நிறுத்தப்படாவிட்டால் தாம் காங்கிறஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார்கள். உண்மையில் அந்த அறிவிப்பு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தது. இந்திய மத்திய அரசுதான் போரை நடத்துகின்றது என்பது வெளிப்படையாக தெரியும். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கொண்டுவந்த படகுகளைப்பற்றிய துல்லியமான தகவல்களை வழங்கியதும் விடுதலைப்புலிகள் கடலுக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பற்றிய தகவல்களையும் இராணுவத்துக்கு இந்தியா வழங்கி இருந்தது. இந்த நேரத்தில் தி.மு.க மத்திய அரசில் இருந்து விலகிஇருந்தால் உண்மையில் ஒரு மாற்றம் ஈழத்தில் நிகழ்ந்திருக்கும். விடுதலைப்புலிகளுக்கு தேவைப்பட்டதெல்லாம் சிறிய கால அவகாசம் மட்டுமே. ஈடு செய்யவே முடியாத இழப்புகள் தொடர்ந்தன. கலைஞரும் கைவிட்டார்.

அப்போது சீமான் தொடர்ச்சியாக முழக்கமிட்டார். தமிழீழ மண்ணில் இருந்தகாலங்களில் கொத்துக்குண்டுகள் வீழ்வது பற்றியும் ராணுவத்தின் அத்துமீறல்கள் நாம் படும் துன்பங்களை எல்லாம் தமிழக புதிய தலைமுறைக்கு கடத்தினார். தொடர்ச்சியாக சிறை சென்றாலும் சிறையில் இருந்து மீண்டுவந்து திரும்பத்திரும்ப எமக்காக முழக்கமிட்டார். ஈழம் தமிழர்களின் கனவு தேசம். அந்தக்கனவு மெல்ல மெல்ல சிதைந்தது. முப்பது ஆண்டுகளாக சிந்திய இரத்தங்கள் எத்தனை, குடுத்த உயிர்ப்பலிகள் எத்தனை, சந்தித்த துரோகங்கள் எத்தனை. எல்லாம் சரிந்து வீழ்ந்தது.

ஈழக்கனவு சிதைந்து போனதும் சீமான் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். ஈழம் பற்றி பேசி அரசியல் செய்கிறார், பணம் வாங்குகிறார் எத்தனை குற்றச்சாட்டுகள் தொடர்ந்தாலும் ஈழம்க்கனவை தொடர்ந்து கடத்தும் சீமானை நாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்போம். எம் கனவு நிறைவேறாமல் கூட போகலாம். ஆனாலும் அது ஒரு பெருங்கனவல்லவா. அதனால் தான் ஆதரிக்கின்றோம். உண்மையில் ஆரம்பகாலங்களில் நாம்தமிழர் கட்சிதான் சமூகவலைத்தளங்களின் அசுரன். அதில் பெரும்பாண்மையானவர்கள் ஈழத்தமிழர்கள் தான். ஏதோ தாமே ஒரு கட்சி ஆரம்பித்தது போல செயற்ப்பட்டார்கள். ஒரு கருத்துக்கணிப்பு வைத்தால் நாம்தமிழர்தான் முன்னுக்கு நிற்க்கும். அத்தனை ஆசை ஒரு தமிழ்க்கனவில். இப்போதும் அதே ஆதரவுதான். சீமான் ஈழம் பற்றி சொல்வதெல்லாம் உண்மைதான். வேண்டும் என்றேதான் விமர்சிக்கின்றார்கள்.

கடந்தமுறை இந்தியா வந்தபோது சீமானை சந்திக்கலாமா என்று போனேன். சந்திப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. சந்திப்பதால் ஒருமாற்றமும் நிகழாது. அவரின் நேரம் தான் விரயமாகும் என்று வீடுவரை சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.

நான் இங்கு ஒரு உணவகத்தில் வேலை செய்கின்றேன். அப்போது முதல் முதலில் நா.த.க. போட்டியிட்டது. அந்தக்காலப்பகுதியில் நாம் வேலை முடியும் போது போய்வருகின்றோம் என்பதற்க்கு பதில் ’நாம் தமிழர்’ என்று கையை உயர்த்த விட்டு செல்வோம். இது ஒரு விழையாட்டாக செய்தது தான். அதே போலவே அங்கே வேலை செய்யும் வெள்ளைக்காரர்களும் செய்வார்கள். ஒரு முறை பரிசிற்க்கு கல்யாணசுந்தரம் வந்திருந்தார். அப்போது எப்படியோ யாரையோ பிடித்து நம் உணவகத்தில் வேலை செய்த ஒருவர் எமது இடத்திற்க்கு கூட்டிவந்துவிட்டார். ஒரு 50 பேர் கொண்ட நண்பர்களுடன் ஒரு உரையாடல் போல நடந்தது. சிறிது நேரத்தில் உணவகம் திறக்க வேண்டும். வேலைக்கு வந்த பிரஞ்சுக்காரன் எம்மைக்கண்டு வழமை போல கையை உயர்த்தி “ நாம் தமிழர்” என்றான். அப்போது கல்யாண சுந்தரம் ஒருநொடி திகைத்துப்போனார். பிறகு எங்களைப்பார்த்து நன்றி நன்றி என்று இரண்டுமுறை கூறினார். நாம் நாம்தமிழர் கட்சியை எமது உள்ளத்தில் சுமக்கின்றோம். ( நீண்ட பதிலாய் போய்விட்டது , மன்னித்துக்கொள்ளுங்கள)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

பாலியல் கல்வி

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்