தண்மதி - பொருள் கூற முடியுமா?



மதி என்பது முழுநிலா. பெண்களை மதிமுகம் என்று உவமையாலும், முகமதி என்று உருவகத்தாலும் பாவலர்கள் பாராட்டுவார்கள்.
நிலாவைப் பற்றி பாடாத பாவலர்கள் இல்லை என்று சொல்லுவார்கள். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தனது புரட்சிக்கவி காவியத்தில்:
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ
என்று பாடுவார்கள்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது தமிழாசிரியர் தாமோதரன் ஐயா அவர்களிடம், இந்தப்பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது- கோலமுழுவதும் காட்டி விட்டால் என்கிற அடி (வரி- செய்யுளில் அடி என்றுதான் சொல்லப்படும்)  கண்ணியக் குறைவாய் இல்லையா என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். 
அவர் சிரித்துக் கொண்டே கோலம் முழுவதும் என்று இருக்கிறதா? இல்லை உடல் முழுவதும் என்று இருக்கிறதா என்று கேட்டார். அவர் கேட்டவுடனேயே எனக்கு பாதி புரிந்து விட்டது. மேலும் சொன்னார் கோலம் என்று சொன்னதால் ஒப்பனையோடு சேர்ந்த உடல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று. தமிழின் இந்த சொல்லழகில் அன்று விழுந்தவன்தான் அதற்குப் பின்னரும் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் பெருமிதங்களில் திளைத்துக் கொண்டேயிருக்கிறேன்.
நிலாவைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோமே. தண்மதிக்கு வருவோம். தண் என்றால் குளிர்ச்சி. தண்மதி என்றால் குளிர்ச்சி பொருந்திய முழுநிலா. அதுவும் எல்லா மாதங்களிலும் வரும் நிலா அன்று. வைகாசி ஏழுநாட்கள் தானே உச்சபட்ச வெயில் அந்த வைகாசியில் வரும் முழுநிலாதான் தண்மதி. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்று தமிழில் அழகான சொலவடை இருக்கிறது இல்லையா! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்